
இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான மகேந்திர சிங் தோனி கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய தோனி பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தது மட்டுமின்றி ஐசிசி நடத்திய மூன்று வகையான கோப்பைகளையும் கைப்பற்றி கொடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திடீரென தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அவர் ஓய்வை அறிவித்த சில நாட்களிலேயே ரசிகர்கள் தோனிக்கு முறையான வழி அனுப்பும் போட்டி நடத்த வேண்டும் என்று கோரிக்கையை பி.சி.சி.ஐ யிடம் முன்வைத்திருந்தனர்.
ஆனாலும் இதுவரை தோனிக்கு உண்டான வழி அனுப்பும் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அவருக்கு இனிமேலும் அது போன்ற ஒரு போட்டி நடக்காது என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் தோனிக்கு ஏன் வழி அனுப்பும் போட்டி நடைபெறவில்லை என்பதும் காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனிக்கு வழி அனுப்பும் போட்டி அமையாததற்கு காரணம் டி20 உலகக் கோப்பைத் தொடர்தான். ஏனெனில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால் அவரால் அந்த தொடரில் விளையாட முடியாமல் போனது. ஒரு வேளை அந்த டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று இருந்தால் நிச்சயம் தோனி அதில் பங்கேற்று முறையான வழி அனுப்புதலுடன் விடைபெற்று இருப்பார் என சரண்தீப் சிங் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனி இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஆனாலும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே அவரால் இந்த தொடரிலும் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தோனிக்கு ஏன் பேர்வெல் போட்டி ஏற்பாடு செய்யப்படவில்லை – உண்மையை உடைத்த சரன்தீப் சிங் appeared first on Cric Tamil.
from Cric Tamil https://ift.tt/3hjzvU2
via
IFTTT
Comments
Post a Comment